×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் தேதி தெப்பல் உற்சவம் தொடக்கம்: 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை 5 நாட்களுக்கு வருடாந்திர தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. தெப்பல்  உற்சவத்தையொட்டி தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி வலம் வர உள்ளார். முதல் நாளான 3ம் தேதி இரவு 7 மணிக்கு சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சமேத ராமர் சுவாமியும், 2வது நாள் ருக்மணி சமேத கிருஷ்ணர் 3 சுற்றுகள் வலம் வர உள்ளனர்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மூன்றாவது நாள் மூன்று சுற்றுகளும், நான்காவது நாள் ஐந்து சுற்றுகளும்,  ஐந்தாவது நாள் ஏழு சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தெப்பல் உற்சவத்தையொட்டி, மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் தோமாலை சேவை, அர்ச்சனை, சஹஸ்ர தீப அலங்கார சேவை, மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளில் தோமாலை சேவை, அர்ச்சனை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீப அலங்கர சேவை, மார்ச் 7ம் தேதி ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நிமிடங்களில் காலியான அங்க பிரதட்சண டிக்கெட் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான தரிசன டிக்கெட் நேற்று மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.  இந்நிலையில் டிக்கெட்டுகள் வெளியான அடுத்த 4 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




Tags : Theppal Utsavam ,Tirupati Eyumalayan Temple , Theppal Utsavam begins on 3rd at Tirupati Eyumalayan Temple: 5 days of Orgitha services canceled
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!